இன்றைய புனிதர் மே 1 புனித யோசேப்பு (சூசையப்பர்) St. Joseph the Worker
பிறப்பு : கி.மு. 39/ 38 நாசரேத்து
இறப்பு : கி.பி. 21/ 22 நாசரேத்து (பாரம்பரியம்)
ஏற்கும் சபை/ சமயம் : கத்தோலிக்கம் ஆங்கிலிக்கம் கிழக்கு மரபு
நினைவுத் திருவிழா : மார்ச் 19 & மே 1 (கத்தோலிக்கம்)
பாதுகாவல் : தந்தையர், நற்படிப்பு, தொழிலாளர்கள்,
புனித யோசேப்பு அல்லது புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
St. Joseph Church Baras - Baras, Rizal
புனிதரின் வாழ்வு : யோசேப்பு, தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு, தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாவுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியா தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியா திடீரென கருவுற்றதால் யோசேப்பு குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். மரியா கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாவை ஏற்றுக் கொண்டார்.
St. Joseph Church Baras - Baras, Rizal
இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் மரியாவையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் யோசேப்பு பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, யோசேப்பு மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாவும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
யோசேப்பு இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாவுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட யோசேப்பு, திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க யோசேப்பு பாக்கியமான மரணம் அடைந்தார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: மத்தேயு - 1:18-21,24-25
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
மத்தேயு 2:13-14,19-21 ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
- மத்தேயு 13:54-56 - இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.
லூக்கா நற்செய்தி : லூக்கா 2:4-7
தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
- லூக்கா 2:21-22 - குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
~ லூக்கா 2:41-46 - ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.
கிறிஸ்தவ புனிதர்களில், புனித கன்னி மரியாவுக்கு அடுத்ததாக புனித யோசேப்பு வணங்கப்படுகிறார். கிறிஸ்தவ வரலாற்றின் தொடக்க காலம் முதலே இவர் புனிதராக போற்றப்படுகிறார். இவர் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார்.
விழாக்கள் : கத்தோலிக்கத் திருச்சபையில் இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. அவை : 1. புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் (மார்ச் 19)
2. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் (மே 1). திருக்காட்சி பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிழக்கு மரபுவழி திருச்சபையினர் புனித யோசேப்பின் விழாவை சிறப்பிக்கின்றனர்.
நாத்திக பொதுவுடைமையாளர்கள் மே தினத்தை தொழிலாளரின் நலனுக்கென்று முதன்முறையாக உருவாக்கினர். இதற்கு முழுமையான பொருள் கிடைக்கும் வகையில் 1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் "தொழிலாளரான புனித சூசையப்பர்" திருநாளை மே மாதம் முதலாம் நாளில் திருச்சபை முழுவதிலும் கொண்டாட பணித்தார். இயேசு ஒரு தச்சு தொழிலாளி என்பதற்கு நம் தாயாம் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசுவை இப்பணிக்கு உருவாக்கியவர் சூசையே. மனிதன் தன் கைகளாலும், தன் அறிவாற்றலாலும் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டி எழுப்பக் கடமைப்பட்டவன் என்பதை புனித சூசையப்பர் தன் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார். உழைப்பை பரிசுத்தபடுத்தவும் உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை, ஒரு பரலோக பாதுகாவலரைக் கொடுக்கும்படியும் 12- ஆம் பத்திநாத பாப்பு 1995-ல் இந்த விழாவை ஏற்படுத்தினர்.
யோசேப்பின் கல்லறை Joseph's Tomb என்பது மேற்குக் கரையின் எல்லைப்புறத்திலுள்ள நப்லஸ் நகரிலுள்ள அடக்கம் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.இப்பகுதி பின் வெண்கலக் காலத்தினதும் விவிலிய சிக்கேம் எனப்பட்ட பகுதியுமாகும். விவிலிய பாரம்பரியம் சிக்கேமின் பொதுப் பகுதி விவிலிய பெருந்தந்தை யோசேப்பு அடக்கம் செய்யப்பட்ட இடமாக அடையாளப்படுத்தப்படுகிறது. Nablus is a city in the northern West Bank, approximately 49 kilometers north of Jerusalem,
இன்றைய உலகில் மனிதன், தனது முயற்சியினாலும், திறமையாலும் அடைந்த மாபெரும் வெற்றியை நினைக்க நினைக்க அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. அனைத்து நாட்டு மக்களும் கைகோர்த்துப் பணியாற்றுகிறார்கள் என்பது வெற்றிக்கு மூல காரணமாக உள்ளது. உலக மாந்தர் அனைவரும் ஒரு குடும்பத்தினர்போல் சுருங்கிவிட்ட காட்சி வியப்பானது. புதிய சாதனங்களும், கண்டுபிடிப்புகளும் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை திருச்சபை உலக மக்களுக்கு எடுத்துரைத்துவருகிறது. கடவுளின் திட்டம், மனித வரலாற்றில் நிறைவேற, மனிதன் எவ்வாறு ஒத்துழைக்கவேண்டும் என்பதை சூசை தன் வாழ்வில் உணர்த்தியுள்ளார். உலகின் பல பகுதிகளிலும் மனித உழைப்பின் மாண்பினைப் பாராட்டும் விழா மே மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படவேண்டுமென்று இத்திருவிழா நிறுவப்பட்டது.
ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்!
துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்!
கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்!
இவ்வாறு வாழ்ந்தவர்தாம், புனித சூசையப்பர்.
இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்ந்திடும் நன்னாள் இன்று. இந்த விழா எவ்வாறு தோன்றியது.
உழைப்பை பரிசுத்தபடுத்தவும், உழைக்கிறவர்களுக்கு ஒரு மேல் வரிச்சட்டத்தை கொடுக்கவும் நம் அனைவருக்கும் ஒரு பரலோக பாதுகாவலரை கொடுக்கும்படியும் 12ஆம் பத்திநாதர் 1955ல் இவ்விழாவை ஏற்படுத்தினார்.
சிந்தனை : நீங்கள் உண்டாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாம் கடவுளின் மகிமைக்கெனச் செய்யுங்கள்.
~~ கொரி. 18:31
செபம் : புனித சூசையப்பரே, நானும் நான் நேசிக்கிறவர்களும், என்னைச் சார்ந்தவர்களும் பாவமில்லாமல் வாழ உதவி செய்யும். ஆமென் †
Post a Comment Blogger Facebook
ReplyDelete
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.