Subash Subash Author The part time Blogger love to blog on various categories
Title: புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை
Author: Subash
Rating 5 of 5 Des:
ஆலயம் தெரிவோம் வரிசையில் 2-வதாக இன்று "புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம். பெயர் : ...
ஆலயம் தெரிவோம் வரிசையில் 2-வதாக இன்று "புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
பெயர் : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
இடம் : பண்டாரவிளை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : கிளைப்பங்கு
பங்கு ஆலயம் : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை
பங்குத்தந்தை அருட்தந்தை W. சகாய ஜஸ்டஸ்
இணை பங்குத்தந்தை : அருட்தந்தை வெலிங்டன்
குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
புதன் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு
திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.
வழித்தடம் : நாகர்கோவில் - திங்கள்நகர் 6B, நாகர்கோவில் - மூலச்சல் 11J, மண்டைக்காடு - தக்கலை 45B. இறங்குமிடம் பண்டாரவிளை
வரலாறு : பண்டாரவிளையானது இயற்கை வளம் நிறைந்த அழகிய ஊர்.
இரயில்வேயின் வடக்கு, சித்தன்தோப்பின் கிழக்கு, மணக்கரையின் மேற்கு மற்றும் புளியன்விளையின் தெற்கு பகுதிகள் பண்டாரவிளையின் எல்கைகளாக அமைந்துள்ளன.

கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயத்தின் அங்கமான 3 அன்பியங்களைக் கொண்ட பகுதியாக இப்பகுதி விளங்கியது.
கண்டன்விளை ஆலயத்தின் வளர்ச்சியில் இப்பகுதி மக்களின் ஈடுபாடும், பங்களிப்பும் மிகவும் முக்கியமானதும் குறிப்பிடத்தக்கதும் ஆகும். கண்டன்விளை ஆலய வழிபாடுகளில் பங்கேற்க சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்தே இவர்கள் சென்று வந்தனர்

இதனால் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள், முதியோர் மற்றும் நோயாளிகளின் ஆலய வழிபாடு மற்றும் ஆன்மீகத் தேவையை முன்னிறுத்தி, பண்டாரவிளையை சேர்ந்த சகோதரர் புஸ்பதாஸ் குருவாக திருநிலைப் படுத்தப் பட்டார். அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்ட மண்ணின் குருக்கள், பண்டாரவிளையில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி நற்பணி மன்றத்தாரால் ஊருக்கு என்று வாங்கியிருந்த சுமார் 4 சென்ட் நிலத்தில், இவ்வூர் இளைஞர்களால் கட்டப்பட்டிருந்த வேளாங்கண்ணி மாதா குருசடியில் வைத்து நடத்த தீர்மானித்து, அப்போதைய கண்டன்விளை பங்குத்தந்தை அருட்தந்தை வின்சென்ட் ராஜ்-ன் அனுமதியுடன், அவரது தலைமையில் மண்ணின் மைந்தர்கள் அருட்பணி சகாயதாஸ் மற்றும் அருட்பணி ஜான் ததேயுஸ் முன்னிலையில் ஒரு பாராட்டு விழா திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

அன்றைய தினம் இம் மண்ணின் மைந்தர்களின் ஆவல் வெளிப்பட்டது. அதாவது பண்டாரவிளை மக்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால் இங்கு ஆலயம் அமைக்கலாம் என்ற கருத்து முன்மொழியப்பட்டு, மக்கள் அனைவரும் இதற்கு மகிழ்வுடன் ஒத்துழைப்பு வழங்க, அருட்பணி ஜான் ததேயுஸ் தலைமையில் இவ்வூரில் செயல்பட்டு வரும் தூய ஆரோக்கிய அன்னை ஊர் முன்னேற்ற சங்கமும் இணைந்து, ஆலயம் கட்ட நிலம் வாங்க ஒரு குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. இதற்கு அருட்தந்தை சகாயதாஸ் ஆலோசகராக தேர்வு செய்யப் பட்டார்.

ஆலயம் கட்ட நிலம் வாங்க ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ 3000 வரியாக நிர்ணயம் செய்து அதனை ஞாயிறு தோறும் சேகரித்து வந்தனர். இவ்வேளையில் இவ்வூரிலிருந்து குருமாணவராக இருந்த சகோதரர் ஜியோ கிளிட்டஸ் குருவாக திருநிலைப் படுத்தப் பட்டார். அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்ட மண்ணின் மைந்தரர்களான குருக்கள், அப்போதைய கண்டன்விளை பங்குத்தந்தை அருட்தந்தை ஐசக் ராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி புதிய ஆலய கனவை நனவாக்க மீண்டும் அழைப்பு விடுத்தனர்.

மேலும் விடுப்பில் வந்திருந்த அருட்தந்தை டேவிட் ராஜ், பங்குத்தந்தை அருட்தந்தை ஐசக் ராஜ் உடன் இணைந்து கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களை சந்தித்து, பண்டாரவிளை மக்களின் ஆன்மீகத் தேவையை எடுத்துக் கூறி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை திருப்பலி நிறைவேற்ற அனுமதி பெறப்பட்டு, திருப்பலி நடைபெற்று வந்தது.

ஆலயம் கட்ட இடம் கிடைக்காததால் அப்போது இருந்த 4 சென்ட் நிலத்தில் ஒரு கொட்டகை அமைத்து ஆலயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருக்கிற இடத்திலேயே கொட்டகை அமைக்க ஆரம்ப வேலைகள் நடந்து கொண்டிருந்த வேளையில், அன்னையின் அருளால் இந்த நிலத்தின் பின்புறம் மேலும் 4 சென்ட் இடம் விலைக்கு கிடைக்க, வாங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேலும் சில சென்ட் நிலமும் கிடைக்க, மொத்தமாக உள்ள நிலத்தில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, ஆலய கட்டுமானப் பணிக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டது. 09-09-2009 அன்று மாலை திருப்பலி நிறைவேற்றி பங்குத்தந்தை முன்னிலையில் அருட்தந்தை டேவிட்ராஜ் அவர்களால் ஆலய கட்டுமானப் பணிகளை துவங்க ஒரு அடிக்கல் அர்ச்சித்து வைக்கப்பட்டது.

அர்ச்சித்து வைக்கப்பட்ட கல்லானது அன்னையின் பிறந்தநாளான 08-09-2010 அன்று பங்கு மக்களின் முன்னிலையில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல்லாக போடப்பட்டது.பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியால் பணிகள் விரைவாக நடந்து வந்தது. தொடர்ந்து வந்த புதிய பங்குத்தந்தை அருட்தந்தை பேட்ரிக் சேவியர் அவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு ஆலயப் பணிகளை விரைவு படுத்தினார்.

புதிய ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 15-05-2015 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.இவ்வாறாக மண்ணின் மைந்தர்களான குருக்கள், பங்குத்தந்தையர்கள் இவர்களின் சிறந்த திட்டமிடல்கள், ஆலோசனைகள், முயற்சிகளின் பலனாகவும் பண்டாரவிளை ஊர் மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் முயற்சியால் கண்டன்விளை பங்கின் கிளைப் பங்காக பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உயர்வு பெற்றது.

பங்கின் வளர்ச்சி :
தொடக்கத்தில் வெறும் 4 சென்ட் நிலத்தை மட்டுமே கொண்டிருந்த இவ்வாலயமானது, பண்டாரவிளை மக்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியால் தற்போது ஆலயத்தை சுற்றிலும் 27 சென்ட் நிலத்தையும், ஆலயத்திற்கருகில் 13 சென்ட் நிலத்தையும், கல்லறைத் தோட்டத்திற்கு 13 சென்ட் நிலத்தையும் கொண்டு விளங்குகிறது.

மேலும் 2018 -ம் ஆண்டில் கிறிஸ்தவ தொழிலாளர்களின் முயற்சியால் சில இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அழகிய தேர் செய்து கொடுத்துள்ளனர். செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி மாதாவின் பிறந்தநாள் விழாவில் ஆலயத்தைச் சுற்றி மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, மாதாவின் பாடல்களைப்பாடி வலம் வருவதுடன், சிறப்பு திருப்பலி நடைபெறும்.

இவ்வாறு ஆலயம் கட்ட நிலம் வாங்கியது முதல் ஆலய கட்டுமானப் பணிகள் வரை, இந்த குறுகிய காலத்தில், வேறெந்த வெளிவட்ட உதவிகளுமின்றி முழுக்க முழுக்க இவர்களது சொந்த உழைப்பு, முயற்சிகள், இறை விசுவாசம், மண்ணின் மைந்தர்களான குருக்களின் அக்கறை மற்றும் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டுதலுமே காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்வாறாக மிகக் குறுகிய காலத்திலேயே பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்கும் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை இறை சமூகத்தினருக்கு வாழ்த்துக்கள் கூறி, மென்மேலும் வளர இறைவனிடம் மன்றாடுவோம்..!
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger

 
Top