† இன்றைய புனிதர் † ( ஜனவரி 20 ) ✠ புனிதர் செபஸ்தியார் ✠(St. Sebastian)
ரோம நீதவான்களின் பாதுகாவல் படைத்தலைவர்/ ரோம படை வீரர்/ நோய் நீக்குபவர்/ மறைசாட்சி : (Captain of the Praetorian Guard/ Roman Soldier/ Healer and Martyr)பிறப்பு : கி. பி. 256 நார்போன், கௌல் (Narbonne, Gaul)இறப்பு : 20 ஜனவரி, 287
நினைவுத் திருவிழா : ஜனவரி 20 (கத்தோலிக்கம்) டிசம்பர் 18 (கிழக்கு மரபுவழி)
சித்தரிக்கப்படும் வகை : மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு
பாதுகாவல் : படை வீரர்கள், தொற்று நோய்கள், நன் மரணம்,
வில் வித்தையாளர்கள், விளையாட்டு வீரர்கள்,
நினைவுத் திருவிழா : ஜனவரி 20 (கத்தோலிக்கம்) டிசம்பர் 18 (கிழக்கு மரபுவழி)
சித்தரிக்கப்படும் வகை : மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு
பாதுகாவல் : படை வீரர்கள், தொற்று நோய்கள், நன் மரணம்,
வில் வித்தையாளர்கள், விளையாட்டு வீரர்கள்,
புனித செபஸ்தியார், ஆதி கிறிஸ்தவ புனிதரும் மறைசாட்சியும் ஆவார். இவர் ரோமப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் துவங்கிய கொடுமைகளில் இறந்தார். இவர் பெரும்பான்மையாக மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு சித்தரிக்கப்பட்டாலும், இவர் அங்கு இறக்கவில்லை.
இவரை அங்கிருந்து ரோம் நகரின் ஐரீன் என்பவர் காப்பாற்றி குணப்படுத்தினார். இதன் பின்பு தியோக்கிளேசியனின் செயல்களை இவர் சாடியதால், அரசனின் ஆணைப்படி இவரை தடியால் அடித்துக் கொலை செய்தனர்.
இவரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் திருப்பாடல் 118இன் மறை உரைகளில் (எண் 22) காணக்கிடைக்கின்றது. இதன்படி செபஸ்தியாரின் பக்தி மிலன் நகரின் 4ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது தெரிகின்றது.
புனித செபஸ்தியாரின் வாழ்க்கை வரலாறு :
புனித செபஸ்தியார் ஃபிரான்ஸ் நாட்டில் நர்போன் நகரில் கி.பி. 256ம் ஆண்டு பிறந்து இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வளர்ந்து, வனப்புமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.
செபஸ்தியார் துன்புற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு, ரோம பேரரசன் தியோக்கிளேசியன் படையில் சேர்ந்தார். தன் வீரத்தாலும் தீரத்தாலும் வெற்றி வாகைகள் பல சூடினார். தியோக்கிளேசியன் தான் வெற்றி பெற்ற ரோமானிய கீழ்திசை நாடுகளுக்கு மன்னனாக தன் தம்பி மாக்சிமியனை நியமித்தான். மன்னன் மாக்சிமியன் செபஸ்தியாரின் வீரதீரத்தையும், நற்குணங்களையும் கண்டு வியந்து, அவரை தன் படைத்தளபதியாகவும், நம்பிக்கையுள்ள மெய்காப்பாளராகவும், நண்பராகவும் ஆக்கிக் கொண்டான்.
அன்புப்பணி : செபஸ்தியார் அன்னை மரியாளைத் தாயாகவும், இயேசு கிறிஸ்துவைத் தன் அரசராகவும் கொண்டு திருத்தந்தைக்கு அன்பு மகனாக விளங்கினார். தன் பட்டங்களையும் பதவிகளையும் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்கும், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், அடிமைகளுக்கும் ஆதரவளித்து உதவி வந்தார்.
செபஸ்தியார் பொது மக்களிடமும் நன்மதிப்புப் பெற்றிருந்தார். அக்காலத்தில் வாழ்ந்த இளைஞர்களுக்கு அருமை அண்ணனாகவும், நண்பனாகவும் திகழ்ந்தார். பங்கிராஸ் என்ற வாலிபனைத் தன் அரவணைப்பிலேயே பாதுகாத்து வந்தார். பங்கிராசும் அவரை ‘அண்ணன் என்று அன்புடன் அழைத்து வந்தார்.
சுரங்கக்கோயில், கல்லறை போன்றவற்றை காத்து வந்த தியோஜனன் என்ற முதியவரின் இரு இளம் மகன்களும் அவர்களது நண்பர்களும் செபஸ்தியார் பேரில் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர்களில் குறிப்பிடத் தக்கவராவர். பங்கிராசின் தந்தை புனித லாரன்ஸ் போன்றோர் வேதகலாபனையில் வீர மரணம் அடைந்தபின் செபஸ்தியாரின் காலம் புயல் ஓய்ந்த அமைதி போல் இருந்தது.
துன்பங்களின் தொடக்கம் : ரோமப் பேரரசின் சக்கரவர்த்தி தியோக்கிளேசியன் புதிதாகப் பரவி வளர்ந்து வந்த இயேசு கிறிஸ்துவின் சத்திய மறையின் மேல் வெறுப்பு கொண்டான்.
கிறிஸ்தவர்களுக்கென்று தனித்தலைவர், தனிச்சட்டம் அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற கொள்கை, மனிதனுக்கு மனிதன் சமம் என்ற கோட்பாடுகள் எல்லாம் அரசனே தெய்வம் என்ற எண்ணம் கொண்ட தியேக்கிளேசியனின்; கோபக்கனலுக்கு நெய் வார்த்தன. அவன் தன் தம்பி மாக்சீமியனுக்குக் கடிதம் எழுதி கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கக் கேட்டுக்கொண்டான். மன்னன் மாக்சீமியன் கொடுங்கோலன். கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பாதி சொத்தும் மீதி மன்னனுக்கும் என்று ஆணை பிறப்பித்தான். பேராசைக்காரர்களும் கொடியவர்களும் கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுத்து ஆதாயம் தேடினர். கிறிஸ்தவர்களை கொடிய விலங்குகளுக்கு இரையாக்கியும், சித்திரவதை செய்தும் மகிழ்ச்சி கொண்டனர்.
கொடியவன் கோர்வீனன் பங்கிராசின் ஆசிரியர் காசியானைப் பிடித்து சித்திரவதை செய்து கொன்றான். பாதாள சிறைகளில் அடைக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உணவு வழங்கி, ஆறுதல் கூறி, ஆதரித்து வந்தார் செபஸ்தியார்.
அவரது இனிமையான கருத்தாழம் மிக்க உரையினால் சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் திருமுழுக்கு பெற முழு மனதாய் தயாராய் இருந்தனர். ஆனால் சிறைத் தலைவன் நிக்கோஸ் கிராஸ்துஸ், தளபதியே நான் சிறைக்கதவை பூட்டவேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினான்.
சிறையில் இருந்த அனைவர் நலத்தையும் கருத்தில் கொண்டு அவன் மனைவி ஜோயே அம்மாவிடம் அவனுக்கு புத்திமதி கூறுமாறு செபஸ்தியார் கேட்டுக்கொண்டார். ஆனால் அவள் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு ஆறு வருடங்களாக ஊமையாய் இருப்பதை அறிந்து உருக்கமாய் செபித்து அவள் நாவில் சிலுவை அடையாளம் வரைந்து அவளைப் பேச வைத்தார். சிறையில் இருந்தோர் அனைவரும் சத்திய மறையை ஏற்றனர். சிறை அதிகாரி நிக்கோஸ் கிராஸ்துஸ் மனம் மாறினார். புது கிறிஸ்தவர்களை தம் வீட்டிலேயே பாதுக்காப்பாக வைப்பதாகக் கூறினார். அனைவரும் செபஸ்தியாரின் பாதம் மண்டியிட்டு கடவுளை போற்றினர்.
திமிர்வாதத்தை குணமாக்குதல் : நகர அதிகாரி குரோமோசியான் பக்கவாதத்தால் படுத்தபடுக்கையாக இருந்தார்.சிறையில் நடந்த அருள் அடையாளங்களை சிறை அதிகாரி வழியாகக் கேள்விப்பட்டு, செபஸ்தியாரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீரத்தளபதி செபஸ்தியார், இறைவன் பாதம் மண்டியிட்டு, உருக்கமாக செபித்து, நகர் அதிகாரியின் உடம்பில் சிலுவை அடையாளம் வரைந்தார். உடனே நகர் அதிகாரி சுகம் அடைந்தார். அவரும் அவர் மகன் திபூர்சியான் என்ற இளைஞனும் கிறிஸ்தவர்கள் ஆயினர்.
பேராசைக்காரனின் சந்தேகம் : ரோமைப் பேரரசின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய வீரத்தளபதியாகிய செபஸ்தியார் ரோமானிய இளைஞர்களைப்போல் அன்றி, ஒழுக்கத்திலும் நற்குணங்களிலும் சிறந்து விளங்குவதைப் பார்த்த பேராசைக்காரன் புல்வியன், இவர் கிறிஸ்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டான். இப்படியிருக்க பங்கிராசைக் கோர்வீனன் பிடித்துக் கொடுக்க, அவர் வேங்கைக்கு இரையாக்கப்பட்டார். இக்கொடிய காட்சியைக் கண்டு கண் கலங்கிய செபஸ்தியாரைப் பார்த்த புல்வியன், இவர் கிறிஸ்தவர்தான் என்பதை உறுதி செய்து கொண்டான்.
புனிதரின் துணிவு : பிறர் ஆஸ்தியின் பேரில் ஆசை கொண்ட புல்வியன் அவரைக் காட்டிக்கொடுக்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். செபஸ்தியாரோ தன் சொத்துக்கள் அனைத்தையும் இரகசியமாய் விற்று ஏழைகளுக்கு கொடுத்து விட்டார். இதை அறியாத புல்வியன் ஒரு நாள் கொலுமண்டபத்தில் நுழைந்து, மன்னனிடம், ‘அரசே தளபதி செபஸ்தியார் கிறிஸ்தவர் என்றான். மன்னன், மகா கோபம் கொண்டு புல்வியனை கொல்லப்போகும் போது செபஸ்தியார் எழுந்து,
"மன்னா! ஆத்திரம் வேண்டாம்! நான் கிறிஸ்தவன்தான். கிறிஸ்தவனாய் இருப்பது என் பாக்கியம்" என்றார் அமைதியாக!
மன்னன் அதிர்ந்து போய் அமர்ந்து விட்டான். ‘நன்றி கெட்டவன்’ என்று வாயில் வந்தபடி தளபதியாரைத் திட்டத் தொடங்கினான். ஆனால் அவர் அஞ்சவும் இல்லை, அசையவுமில்லை.
மன்னன், ‘தளபதியாரே நீர் உம்முடைய இந்த வேதத்தை விட்டுவிடும். நான் மேலும் உமக்கு பல பட்டங்களும் பதவிகளும் தந்து சிறப்பிக்கிறேன். என் முதன்மைப் படைத் தளபதியையும், என் மெய்க்காப்பாளரையும் இழக்க முடியாது. ஆகவே தாங்கள் மறுப்பதாக மட்டும் சொன்னால் போதும். ஏனெனில் சட்டத்தை மாற்ற முடியாது’ என்று வேண்டினான். ஆனால் செபஸ்தியார் தான் வணங்கும் தேவன் உண்மையானவர்; அவரை மறுதலிக்க முடியாது. கிறிஸ்து ஒருவருக்கே கீழ்படிய முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
ஆத்திரம் கொண்ட மன்னன் மாக்சீமியன் கோத்திராத்தூசிடம் அவரை கைது செய்யக் கூறினான். கோத்திராத்தூஸ் மறுக்கவே, கோத்திராத்தூஸ் கிறிஸ்தவர் என்பதை அறிந்து, உடனே வெளியில் இழுத்துச் சென்று கொல்ல உத்தரவிட்டான்.
செபஸ்தியார் அம்புகளால் எய்யப்படுதல் : வெளிப்படையாக மற்ற கிறிஸ்தவர்களைப்போல் செபஸ்தியாரைக் கொன்றால் நாட்டில் குழப்பம் உண்டாகும் என்று அஞ்சிய மன்னன், அவரை இரகசியமாய் ஒர் அறையில் அடைத்து வைத்தான்.
ஆப்பிரிக்க நாட்டு வில் வீரன் அபாக்கியானை அழைத்து, ‘செபஸ்தியாரை இன்று இரவே 2 மணிக்குமேல் காட்டுப்பக்கம்; கொண்டு சென்று மரத்தில் கட்டி வைத்து, அணு அணுவாக வேதனைப்படுத்தி சல்லடையாக அம்பால் துளைத்து, சித்திரவதைப்படுத்தி கொல்லுங்கள்; தலை, இதயம், வயிறு போன்ற வர்ம இடங்களில் அம்பு எய்து உடனே கொன்றுவிடக் கூடாது. என்று கோபாவேசமாக மாக்சிமியன் கட்டளையிட்டான்.
முழந்தாள் படியிட்டு ஒர் வானதூதன் போல் இருகைகளையும் விரித்து செபித்துக் கொண்டிருந்த செபஸ்தியாரைப் பார்த்து வியந்து வணங்கினான் அபாக்கியான். பின்னர் மன்னன் கட்டளையை நிறைவேற்ற அழைத்துச்சென்றான்.
பட்டமரம் பூத்த காட்சி : காட்டில் பட்டமரத்தில் கட்டிவைத்து மன்னனின் கட்டளைப்படி அம்பால் எய்தனர் வில்வீரர்கள். இறந்துவிட்டார் என நினைத்து கட்டுகளை அவிழ்க்க மரித்தவர் போல் கீழே விழுந்தார். செபஸ்தியாரை கட்டி வைத்த பட்டமரம் பட்டொளிவீசிப் பூத்துக்குலுங்கியது. வில்வீரர்கள் அஞ்சி நடுங்கி ஒடினர்.
அவ்வேளையில் அங்குவந்த சில கிறிஸ்தவ வீரர்கள் செபஸ்தியாரின் உடலில் உயிர் இருப்பதைக்கண்டு, இரேனே அம்மாள் என்ற கிறிஸ்தவப் பெண்ணின் வீட்டில் சேர்த்தனர். மருத்துவ குருவால் சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கம் தெளிந்தார் செயஸ்தியார். தான் பெரிய வேதனைக்குப் பின்னும் இவ்வுலகிலேயே இருப்பதை நினைத்து வருந்தினார்.
கற்பின் சிகரம் : கால் ஊன்றி நிற்கும் வலுப்பெற்றவுடனே, கொடியவன் கொடுங்கோன்மையை எதிர்த்து குரல் எழுப்பி, தட்டிக்கேட்கப் போவதாகக் கூறினார். வேண்டாம் என்று குருவானவரும் மற்றவர்களும் தடுத்தனர்.ரோமப்பிரபு பபியானின் ஒரே மகள் பபியோலா, மன்னனிடம் இனி மேல் சொல்ல வேண்டாம் என்று பணிந்து வேண்டியும் செபஸ்தியார் சம்மதிக்கவில்லை. ஆகவே அவருக்காக பரிந்து பேச அவளே மன்னனிடம் சென்றாள்.
வேதசாட்சி முடி : கி. பி. 288ம் ஆண்டு ஜனவரி 20ம் நாள், செபஸ்தியார் மீண்டும் கால் ஊன்றிய முதல் நாள். செபஸ்தியார் மாடிமீது நின்றபடி மாக்சிமியா! மாக்சிமியா என்று அவனை பெயர் சொல்லி அழைத்தார். இரேனே அம்மாவின் வீடு அரண்மனைக்கு அருகில் என்பதால் மன்னன் அவனைக் கண்டான். அவர் உயிருடன் எலும்பும் தோலுமாக நிற்;பதைக்கண்டு வானுலகிலிருந்து நம்மை சபிப்பதற்காக அனுப்பப்பட்டாரோ? என்று அஞ்சி நடுங்கினான். அவர் மாக்சிமியா! கொடுங்கோலனே! குற்றமற்றவர்களையும் கொன்று குவிக்கிறாயே! இதோ! தெய்வ கோபாக்கினை என்னும் இடி உன் தலைமேல் விழப்போகிறது. மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டால் தப்பிப் பிழைப்பாய், இல்லையேல் காப்பாற்றுவார் இல்லாமல் அழிந்துபோவாய். கடவுளின் பெயரால் உன்னை எச்சரிக்கிறேன்’ என்றார் செபஸ்தியார்.
கோபம் கொண்ட மன்னன் அவர் உயிருடன் இருப்பதைக்கண்டு, அவரை இழுத்து வந்து, தன் முன்னிலையில் தடியால் அடித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். கண்ணெதிரில் நடந்த படுகொலையைக் கண்ட பபியோலா மனம் வெதும்பி இல்லம் சென்றாள். கிறிஸ்தவள் ஆனாள். காலமெல்லாம் கன்னியாக வாழ்ந்து தன் வாழ்வை இயேசுவுக்காகவும், தன் பெருஞ் செல்வத்தை ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்டாள்.
உடல் அடக்கம் : செபஸ்தியாரின் உடல் கல்லுடன் கட்டி சாக்கடையில் போடப்பட்டது. அன்று இரவே நம் புனிதர் பங்கிராசின் அன்னை லூசினாவின் கனவில் தோன்றி, தன் உடல் இருக்கும் இடத்தை தெரிவித்தார். அப்புண்ணியவதி உடனே ஆட்களை அனுப்பி அவ்வுடலை எடுத்துவரச் செய்தார். செபஸ்தியாரின் திரு உடல் சுரங்கக் கல்லறையில் புனித இராயப்பர் சின்னப்பர் கல்லறைகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அச்சுரங்கம் “புனித செபஸ்தியார் சுரங்கம்” என்றே அழைக்கப்படுகிறது.
கொடுங்கோலர்களின் அழிவு : சில வருடங்களுக்குப் பின் உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியனும் அவன் தம்பி மாக்சிமியனும் கொன்ஸ்தந்தின் என்னும் சிற்றரசனிடம் போரிட நேர்ந்தது. திருத்தந்தை ஆசியுடன் கான்ஸ்டன்டைன் மன்னனின் படைகள் சிலுவைக் கொடியை முன்னிறுத்திப் போரிட்டன. சிலுவைக் கொடியைக் கண்ட தியோக்கிளேசியன், மாக்சிமியன் படைகள் சிதறுண்டு போயின. செபஸ்தியார் கூறியது போல மாக்சிமியனும், தியோக்கிளேசியனும் மாட்சியெல்லாம் இழந்து, நாய்களைப்போல் விரட்டப்பட்டனர். தியோக்கிளேசியன் திபேரி ஆற்றில் விழுந்து மடிந்தான். மாக்சிமியன் கஞ்சிக்கு காற்றாய் பறந்து, அலைந்து, மடிந்தான்.
கிறிஸ்தவர்களின் வெற்றி : கான்ஸ்டன்டைன் மன்னன் வெற்றி பெற்றதும் தன் மணிமகுடத்தை திருத்தந்தையின் காலடியில் வைத்தான். அவர் ரோம பேரரசனாக அவனுக்கு முடி சூட்டினார். கிறிஸ்தவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் அரசாங்க மதமாக மன்னனாலும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறைப்பட்ட கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட கொலுமண்டபம் அன்னை மரியாளின் ஆலயம் ஆக்கப்பட்டது. வேதசாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பதற்கிணங்க ரோம பேரரசு கிறிஸ்தவ பேரரசாக மாறியது.
Post a Comment Blogger Facebook